Friday, April 15, 2011

சிதைவு

                    இப்பொழுதெல்லாம் நிலா என் வானத்தில் மறைவதேயில்லை. இருளின் பின்னல்களில் இழைந்து போவது சங்கீதம் போல் சுகமளிக்கிறது. புரண்டுக்கொண்டிருக்கும் படுக்கையை பார்க்க சகியாமல் ஜன்னல் கம்பிகளை உடைத்தெறிந்துவிட்டு விஸ்தாரமான வீதிகளின் மத்தியில் ஓடியிருக்கிறேன். கள்ளத்தனமாய் கனிகளை கொய்யவும், கற்களை துரத்தவும் இரவு ஒத்தாசை செய்யும்.

                  எனக்காக காத்திருக்கும் விண்மீன்களுடன் விடியும் வரை பொழுது சுவாரஸ்யமாய் கழியும். சிலந்தியை சுற்றி பின்னப்பட்டிருக்கும் இழைகளைப்போல் பகலில் என்னைச்சுற்றியிருக்கும் நூதன இழைகளில் இருந்து தப்பித்து தாரகைகளின் ஒளிப்பிரவாகத்தில் நனைந்து மீளுகையில் வெள்ளியாய் நானும் மிளிர்ந்தது உண்டு. புரையோடிக்கொண்டிருக்கும் என் பிரதியை பிரித்து படிக்கும் தவறை செய்யாதீர். அதுவும் என்னைப்போலவே எண்ணற்ற எண்ணங்களை தனக்குள் அமிழ்த்தி, தென்றல் தீண்டினாலும், வெடித்து சிதறும் அபாயத்தோடு அபயத்திற்க்காக காத்திருக்கிறது. 

                    வண்டுகளின் ரீங்காரம் சற்றே சலிப்பைத்தர, காட்டுப்பாதையில் என்னுடன் நடந்து வருகிறாய் நீ. என் கையை உன் கையுடன் பிணைக்க முற்படுகிறேன். நீயோ பரந்து விரிந்த விருட்சங்களின் கிளைகளுக்கும், புள்ளினங்களுக்கும் உன் கண்களை ஒப்படைத்திருந்தாய். நிலைக்குத்திய உன் பார்வையின் விளிம்பை தொட முயற்சித்தபோது அது தேன்கூட்டில் நின்றிருந்தது. தேனேடுப்பதில் உனக்குள்ள பிரியம் நான் அறிந்திருந்த போதிலும் நான் அலட்சியபடுத்த, " உதவி செய் " என்று நீ இறைஞ்சினாய். சில மணித்துளிகனாலும், நான் உன்னை அருந்தி, திருப்தியானேன். என் மேலாடையால் முகத்தை சுற்றிக்கொண்டு, துடைகளில் கால்பதித்து, கிளைகளில் லாவகமாய் தாவியேறி, கழியால் கலைத்து, தேன் தஞ்சம் புகுந்த மென்மையான பாகத்தை கீழே விழச்செய்தாய்.

                   அப்பொழுதே தயாரித்திருந்த இலை வலையினுள் விழுமாறு என்னையும் ஆட்டுவித்தாய். தேனை உன் தீயினில் நனைத்து என்மீது சொட்டச்செய்தாய். அது பனித்துளிகளாய் மாறி உருண்டோடிய வினோதம் கண்டு விக்கித்துப்போகிறாய்.  உன் வெறியாட்டங்களின் தகிப்பை தணிக்க மௌனமாய் என் சுபாவங்கள் மெலிந்து, உறைந்து, உருகி தன்னை மாற்றிக்கொள்கின்றன. எவ்வளவு தூரம் முயற்சித்தும் இயல்பாய் நடந்து கொள்ள முடியாத போது இயலாமையால் இலை உதிர்க்கிறேன். உணர்வுகளை புரிந்து கொள்ள என்று நீ முற்படுகிராயோ, அன்றே உன் இமைகளில் பூக்கும் மலர்களை ரகசியமாய் சூடிக்கொள்ளும் திராணி இல்லா என்னையும் ஒருவேளை உணரலாம் நீ....!


                    நள்ளிரவு வேதாளம் சூரியனைத் திருடி ஒலித்துவைத்தபோது மீட்டு வந்த மால்டேவிய வீரன் இயானிக்கைப்போல் நானும் உன் இருள் பொதிந்த  இதயத்திலிருந்து என் ஒளிக்கீற்றை பிரகாசமாய் பரவச்செய்ய பிராயத்தனப்படுகிறேன். மலரின் வாசலில் நுழைந்து வேரின் வரையில் ஊர்ந்து,  பூமியின் ஆழத்தில் குமைந்து கொண்டிருக்கும் அக்னியை புசிக்க அழைக்கிறேன். உன்னை சிரஞ்சீவியாக்க முயற்சி செய்யும் என்னை ஏமாற்றி பறந்து கொண்டிருக்கும் உன் ஜுவாலையை தணிக்க முடியாது தவித்துப்போகிறேன்.

                  ஆனால், நீயோ சீறும் ஈசல்களின் சிறகுகளில் அமர்ந்து உன்னுடைய வேகத்திற்கு ஈடு கொடுக்கும் என்னை கோரச்சிரிப்பில் கவிழ்த்துப்போடுகிராய். அவைகளை பஸ்பமாக்கி கண்களில் ஊதி இதயத்தை இறுக்குகிறாய். நீரைப்பிளந்து பிசைந்து பொம்மை செய்ய நினைப்பதாய் கேலி பேசுகிறாய். இருந்தும், தொடர்வதை தொடர்ந்துகொண்டே , உனக்கான என் விழைவுகளை பதிவு செய்து வைக்கிறேன் பவழமல்லியில்...! அதன் செம்மஞ்சள் காம்புகள் இரத்த சிவப்பில் மாறியிருக்க, இதழ்கள் இன்னும் வெளுத்துக் கொண்டிருக்கின்றன. விரியும் மொட்டுகளில் இருந்து கசியும் இரத்த வாடையால் மயங்கி சரிந்தபோது எதிரில் உன் நிழல் தெரிந்தது. 

                 ஜீவநாதம் தட்டியெழுப்ப ஆந்தைகளின் பொந்தில் அடைப்பட்டிருக்கிறேன். அலறும் அவைகளின் ஓசை கேட்கும் பொழுது பயம் கவ்வும். முன்பே அங்கிருந்த என் இனத்தின் படிமங்கள் நான் புதிது அல்ல என்று உணர்த்தின. ஆங்காங்கே காணப்பட்ட பவழமல்லி குவியல்களைத் துழாவியபோது, மட்கிய சிற்பங்கலாக அவைகள் தட்டுப்பட்டன. பாலை விடுத்து உதிரம் உறிஞ்சும் உன் சாயல்களின் பிடியில் நானும் சிக்கிக்கொண்டேன். முனைப்புடன் மீதங்களை என்னுள்ளே செலுத்திக்கொண்டிருக்க வலியினால் அங்கங்கள் அயர்ந்துகொண்டிருந்தன. முன்பே வழிந்திருந்த சாந்தின் குழம்பில் இருந்து ஈசல்கள் கிளம்பி தேகத்தில் துளையிட்டு என்னை தூர்ந்து போக செய்துக்கொண்டிருந்தன. சிதைந்த என் சிதறல்களை ஜன்னல் கம்பிகளினூடே அவைகள் பத்திரமாய் நுழைத்துக்கொண்டிருக்க,   நான் இயல்பாய் மாறிக் கொண்டிருந்தேன். மீண்டும் என் நீட்ச்சிக்காய் காத்துக்கொண்டிருக்கிறாய் நீ...!

No comments:

Post a Comment