Sunday, April 17, 2011

என்னோடு நான்

                                     " எங்கே போகலாம்? " .....இது சுரேன்.
                                     " உன் விருப்பம் ".... இது நான்.
                                     " மெரீனா பீச் ஓகே வா? "... என்றான்.
அமைதியாய் பிரயாணித்தோம். எதாவது பேச மாட்டானா என்று ஏங்கினேன். மணலில் நடந்தோம். அமைதியான இடமாய் தேர்வு செய்து அமர்ந்தோம். இப்போதும் பேசவில்லை. " அநேகமாய் அதைப்பற்றி தீவிரமான சிந்தனையில் மூழ்கி விட்டானோ? ... யோசிக்கட்டும்...! யோசிக்கட்டும்...! " ....அலட்சியமாய் சிரித்துக்கொண்டேன். 

                               கண்களை ஓட விட்டேன். ஏதேதோ பிம்பங்களை அவை துரத்தின. நெருங்க நெருங்க புரிந்தது. அது நானும் சுரேனுமென்று. முதன் முதலாய் நானும் அவனும் வந்த போதும் மௌனமாய்த்தான் வந்தான். அதிகம் பேசாதவன் போல் இருந்தான். திருமணமாகி ஒரு மாதம் கழித்து அவன் அப்பாவின் தூண்டுதலால் என்னை அழைத்து வந்திருந்தான். அந்த முப்பது நாளில் முப்பது வார்த்தைகள் பேசியிருந்தாலே அதிகம். என்றாவது என் பெயர் சொல்லி அழைக்க மாட்டானா என்று ஏங்கவே தொடங்கியிருந்தேன். 

                              சுரேனின் அக்காவிற்கு என்னை ரொம்பவே பிடித்திருந்தது. பக்கத்து தெருவில் தான் அவள் வீடு. நாள்முழுதும் என்னுடனே இருந்தாள். பேச ஆரம்பித்தால், அதுவும் சினிமா என்றால் இலேசில் முடிக்க மாட்டாள்.  "என் பொண்ணுக்கு சூர்யான்னா ரொம்ப பிடிக்கும். எனக்கும் தான். அவன் கண்ணு ரொம்ப நல்லா இருக்கில்ல " ...என்பாள். பதிலை நான் யோசிக்கும் போதே வேறொரு செய்தியை தொடங்கியிருப்பாள். அவள் விசயத்தில் என் காதுகள் சொற்களை வடிகட்டியே பழகிவிட்டன. அவள் சென்றதும் வீடு மீண்டும் நிசப்தத்தில் மூழ்கிவிடும். 

                              மாமா மாடியில் தன் அறையில் ஏதாவது இசையில் மூழ்கியிருப்பார். கஜல் கேசட்டுகள் குவிந்திருக்கும் அவர் அறையில் மெல்லிய ஊதுவத்தி கமழ்ந்து கொண்டிருக்கும். மாமாவின் தனிமையில் கல் எறிய ஒருபோதும் துணிந்ததில்லை நான். அத்தை பழுத்த சுமங்கலியாய் ஒரு மாதம் முன்புதான் போய் சேர்ந்திருந்தாள். மாமாவும் அத்தையும் இருந்த புகைப்படத்தை பார்த்தேன். வாழ்வை முழுமையாய் புரிந்திருந்தவளை போல அர்த்தத்துடன் சிரித்துக்கொண்டிருந்தாள். " என்ன ஒரு அருமையான பிறவி...! " . ஒருவேளை அத்தை உயிரோடு மீண்டும் வந்தால்? 

                            நான் தனிமை விரும்பி என்று சொல்லிக்கொண்டது எல்லாம் அவ்வப்போது நினைவுக்கு வரும். அப்போதெல்லாம் என்னை விநோதமாய் பார்ப்பார்கள். மௌனமாய் இருப்பதும், திடீரென சிரிப்பதுமாய் இருந்த என்னை அதிசயமாய் பார்த்து, பிறகு விலகுவார்கள். மீண்டும் தனிமையில் மூழ்கி போவேன். " சதா இப்படி மௌனியாய் இருக்காதேம்மா " ...என்று அப்பாதான் கடிந்து கொள்வார். இதற்கே கோபிப்பேன் அவரை. அப்பொழுது அதன் அர்த்தம் புரியவில்லை என்றாலும், மெல்ல மெல்ல மௌனத்தை கொலை செய்ய தொடங்கினேன். என்று என் இயல்பை தொலைத்தேனோ, அன்றிலிருந்து நான் இயல்பாய் மாறிவிட்டேனாம். எல்லாரும் சொன்னார்கள். மீண்டும் தோழிகளும் ஒட்டிகொண்டார்கள்.

                              மௌனத்தின் கொடூரத்தை எனக்கு சரியாய் உணர்த்தியது சுரேன் மட்டுமே. " பேசுவதின் மகத்துவம்" என்று புத்தகம் போடலாமா என்று கூட வேடிக்கையாக யோசித்தேன். மூன்று மாதங்கள் முடிந்து போயிருந்தது. அவன் அக்காவுடன் நானும் ஒட்டிக்கொண்டேன். எல்லாரும் பரிச்சயமாயிருந்தார்கள். அவனை தவிர.

                            சீக்கிரமே, எல்லாவற்றிற்கும் விடை கிடைத்தது. ஒருநாள் மாலையில், மாடியில் தயங்கி தயங்கி பேசினான். அவன் அம்மாவின் கட்டாயத்தினாலே திருமணம் செய்து கொண்டதாக சொன்னான். ஒருவாறு இதை யூகித்திருந்தேன். இதை புரிந்தே நானும் விலகியிருந்தேன்.

                            " என்னால் நீ எந்த சந்தோசத்தையும் அடைய வில்லை என்று எனக்கு தெரியும். எவ்வளவு முயற்சித்தும் என் மனம் உன்னிடம் ஈடுபட மறுக்கிறது. எல்லாவற்றையும் ஒரு கேட்ட கனவாக நினைத்து மறந்து விடு. முடிந்தால் என்னை மன்னித்து விடு. சட்ட ரீதியாக நாம் விலகிவிடலாம். என்ன சொல்கிறாய்? " .... என்று கேட்டுவிட்டு காத்திருந்தான். பதில் சொல்லாமல் கீழே வந்து விட்டேன்.

                             அவன் வெகுநேரமாகியும் கீழே வரவில்லை. வழக்கம் போல் நான் என் பணிகளை செய்தேன். ஏதேதோ யோசனை. சற்றும் கரிசனமில்லாமல் நேரம் தன் வழியே சென்று கொண்டிருந்தது. மறுநாள் மாலை என் வீடிற்கு திரும்பினேன். நிரந்தரமாய்...! இன்றோடு எட்டு மாதங்கள் ஆயின.

                              இன்று இவனை தற்செயலாக பார்த்ததும் செயலிழந்து போனேன். அழைத்ததும் மறுக்க மனமில்லாமல் சற்றே நம்பிக்கையுடன் கடற்கரை வரை வந்திருக்கிறேன் இரண்டாம் முறையாக. மெதுவாக சுயநிலைக்கு வந்தேன். " ஹல்லோ எதாவது காதில் விழுகிறதா? " ...ஆர் யு ஆல் ரைட்? " என்றான். ...." ம்... என்ன சொன்னிங்க? " ... என்றேன். 
                           
                             நாளை தான் வெளிநாடு செல்வதாகவும், மறுபடியும் இந்தியா திரும்பும் எண்ணம் இல்லை என்றும் சொன்னான். இருள் கவிய தொடங்கியிருந்தது. சிறிது நேரம் பொதுவாக பேசிக் கொண்டிருந்து விட்டு அவன் கிளம்பி போக, தனியாய் நடந்தேன். எத்தனை முயற்சித்தும் அழாமல் இருக்க முடியவில்லை. ஏனோ, புகைப்படத்தில் இருந்த அத்தை நினைவில் வந்து போனாள்...!!!

3 comments:

  1. //மெல்ல மெல்ல மௌனத்தை கொலை செய்ய தொடங்கினேன். என்று என் இயல்பை தொலைத்தேனோ, அன்றிலிருந்து நான் இயல்பாய் மாறிவிட்டேனாம்//

    வலியை உணர்த்தும் வரிகள் இது உண்மையா உண்மையாக இருந்தால் மனம் வருந்துகிரேன்!

    ReplyDelete
  2. மிக்க நன்றி. நான் புதிதாக எழுத துவங்கியுள்ளேன். இது போன்ற அதரவு என்னை இன்னும் நன்றாக எழுத தூண்டுகிறது. உங்களை போன்றவர்கள் என்னை வழிநடத்த எதிபார்க்கிறேன்.

    ReplyDelete
  3. மிக்க நன்றி. நான் புதிதாக எழுத துவங்கியுள்ளேன். இது போன்ற ஆதரவு என்னை இன்னும் நன்றாக எழுத தூண்டுகிறது. உங்களை போன்றவர்கள் என்னை வழிநடத்த எதிபார்க்கிறேன்.

    ReplyDelete