Wednesday, April 27, 2011

அனலாகி புனலாகி

 அவளை அன்றுதான் முதன் முதலில் பார்த்தேன். கோவில் பக்கமாய் நடந்து  வரும் சமயம் மனதையும் காதுகளையும் இனிமையாய் ஊடுருவியது அந்த குரல். குரல் வந்த திசையை நோக்கி நடந்தேன். பெண் ஒருத்தியின் அதரங்கள் அசைய அசைய இசை காற்றில் வளைய வந்தது. அவள் கோவில் வாசலில் கோலமிட்டு கொண்டிருந்தாள். அரவம் கேட்டு அலட்சியமாய் நிமிர்ந்து பார்த்துவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள். 

திறமை இருக்கும் இடத்தில் திமிரும் இருக்குமாம். இதை மனம் உணர்ந்தாலும் அவளின் பார்வையின் அலட்சியத்தால் மானம் இழந்து போனேன். அன்று துவங்கி, இன்று வரை தினமும் அவள் குரலை கேட்காவிட்டால் எதையோ இழந்து விட்டது போல ஆனேன். 

பெயர் கனகம். வயது முப்பதை தொட இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது. இசையில் ஈடுபாடு உண்டு. கோவிலை ஒட்டிய வீட்டில் தனியே வசிப்பவள். அருகில் உள்ள டவுனில் எதோ ஒரு கடையில் விற்பனை பெண். இந்த விவரங்களை சேகரிக்கவே  பல தர்மசங்கடங்களை சந்திக்க வேண்டியிருந்தது. 

காலையிலும் மாலையிலும் அவளை தேடிச்சென்று பார்ப்பது என் அன்றாட வேலையில் ஒன்றாகிப்போனது. எப்படியும் வேலைக்கு செல்லும் பேருந்தில் வைத்து அவளை பார்த்து விடுவேன். ஒருநாள் பார்க்காவிட்டாலும் அன்று நாள் முழுதும் என் மனம் எதிலும் இலயிக்க மறுத்தது. வார்த்தை ஒன்றும் பேசாத போதும் கோடி கோடி இன்பத்தையும் துன்பத்தையும் வாரி வழங்கினாள். நிலைமை இப்படியே சென்றுக்கொண்டிருக்க, அன்றும் நான் அப்படி பேருந்தில் அவளைத் தேடிக்கொண்டிருக்க, அவளை காணவில்லை. மனம் துடிக்க தொடங்கியது. " என்னவாயிற்று அவளுக்கு...? எதுவும் உடல்நிலை சரியில்லையோ...? வீட்டிற்கு போய் பார்க்கலாமா...? " யோசித்தவாறே திரும்பிய என் கண்களில் முதல் இருக்கையில் அமர்ந்திருந்த கனகம் கண்ணில் பட்டாள். அவளும் என்னை கவனிப்பது தெரிந்தது. இத்தனை  நாளில் அவளை தேடி வந்து பார்ப்பதை கண்டிப்பாக அறிந்திருப்பாள். என்னை பார்த்து சிரித்தும் வைத்தாள் அன்று. அசடு வழிந்து, வீட்டிற்கு திரும்பினேன். அன்று இரவு தூங்கவே இல்லை. அவளின் பளீரென்ற சிரிப்பு நினைவில் வந்து வந்து போனது. 

அன்று முதல் எங்கு பார்த்தாலும் புன்னகைக்க துவங்கியிருந்தாள். மிக அழகாய் சிரித்து கொன்று விட்டு போவாள். பின் வந்த நாளில் கொஞ்சமாய் பேச துவங்கியிருந்தோம். அவளின் சிரிப்பை எனக்கே ஏகபோக உரிமை ஆக்கிக்கொள்ள முடிவு  செய்துள்ளேன். அதற்காகத்தானே இவ்வளவு நாள் துடிக்கிறேன். ஆனால் அதென்னவோ, எல்லாருடனும் இயல்பாக பேசுபவள், என்னுடன் மட்டும் சிரிப்பையும் அளந்தே கொடுக்கிறாள். இதுவரை சில நிமிடங்கள் கூட சேர்ந்தார்ப்போல் பேசியதில்லை. மனதில் ஆசைகளுக்கு மட்டும் குறைவில்லை. 

கனகத்தை காதலிக்க துவங்கி இன்றோடு இரண்டு ஆண்டுகள் முடியப்போகிறது. எனக்கும் அவளுக்குமான இடைவெளி மட்டும் குறையவில்லை. பார்வையின் பரிச்சயம் மட்டுமே.

இன்று எப்படியும் சொல்லிவிடுவது என்று முடிவு செய்திருந்தேன். காலையிலேயே பேருந்து நிறுத்தத்திற்கு வந்து விட்டேன். நேரம் தான் நகரவில்லை. அதோ இதோவென நேரம் நகர, பேருந்தும் வந்து விட்டது. ஆனால் கனகாவை காணவில்லை. "... என்னவாயிற்று அவளுக்கு...? "  மனம் துடிக்க தொடங்கியது.

கால்கள் அவள் வீடு நோக்கி தானாக நடக்க தொடங்கியது. வீட்டை நெருங்க நெருங்க, என் இதயம் வேகமாக துடிக்க, அதன் சப்தம் எனக்கே கேட்டது. யாரோ ஒருவர் கனகாவின் வீட்டில் இருந்து வெளியே வந்தார். வந்தவர் என்னை பார்த்து ஒருவிதமாய் சிரிக்க, நான் கண்டுக்கொள்ளவில்லை. உடன் வெளியே வந்தவள், என்னை அங்கே எதிர்ப்பார்க்கவில்லை என்பது, அவளின் திடுக்கிட்ட முகத்தில் தெரிந்தது.

"வாங்க..."  என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றவள் சில நிமிடங்களில் திரும்பி வந்தாள். முகம் கழுவியிருப்பாள் போலும். முகத்தை பார்த்து "ம்ம்.... சொல்லுங்க...என்ன விஷயம்...?..." என்றவளிடம், திக்கி திணறி இதுவரை மனதில் ஒளித்து வைத்திருந்ததை ஒருவாறு சொல்லிமுடித்தேன். பின், அவள் முகத்தை பார்க்க, ஆழ்ந்த மௌனம் அவளிடம். முகம் கவிழ்ந்திருந்தாள். கண்கள் கலங்க, தேம்பி தேம்பி அழத்துவங்கினாள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வதென்றும் தெரியவில்லை. "...ஏங்க... என்ன ஆச்சு...? ... ப்ளீஸ் அழாதிங்க..." அவளை பார்த்து கூறினேன். அவள் நிறுத்துவதாக தெரியவில்லை. சரி அழட்டும் அவளே சமாதானமாகட்டும் என்று சிறிது நேரம் மெளனமாக அமர்ந்திருந்தேன். சிறிது சிறிதாக அவள் அழுகை குறைய, அவள் அருகே சென்று அமர்ந்தேன்.

அழுகை குறைந்து என்னை நிமிர்ந்து பார்த்தவளிடம், "...என்ன ஆச்சு..." என்றேன். மெதுவான குரலில் மௌனத்தின் முடிச்சை அவிழ்த்தாள். "...நான்... நான் நல்ல பெண்  இல்லை. என்றோ வழி தவறியவள்..." என்றாள். ஆதரவில்லாமல் அநாதை ஆனதும், அலைகழிந்து போனதையும் விரிவாக சொன்னாள். "...செத்து போயிருப்பேன்... துணிவில்லை...ஈனமான என் பிழைப்பை சகிக்காமல் எத்தனையோ நாட்கள் அழுதிருக்கிறேன்... நீ என்னை விரும்புவதை என்றோ புரிந்து கொண்டேன்... எனக்கும் உன்னை பிடிக்கும்... உன் ஞாபகம் தான் எனக்கு கொஞ்சம் ஆறுதல் தரும்... ஆனால்  நிலைமை உன்னிடம் உண்மையை  சொல்லாமல் தடுத்துவிட்டது...

"எனக்கு தெரியும்...இனி நீ என்னை விரும்ப மாட்டாய்... இன்று நீ உன் காதலை சொன்னதே எனக்கு போதும்... மீதமிருக்கும் ஜீவனை ஆனந்தமாய் கழிப்பேன்..." அவள் பேச பேச நான் உறைந்து போயிருந்தேன். இவளிடம் இத்தனை இரகசியமா ? மனம் நம்ப மறுத்தது. அதனாலென்ன...?  நல்ல கலா ரசிகையான என் கனகம் ஒருபோதும் தவறி போக முடியாது  . மெதுவாக அவள் கைகளை பிடித்து என் கையில் வைத்து கொண்டு,  முகம் மறைத்திருந்த அவள் கூந்தலை விலக்கினேன். அழுததில் முகம் சிவந்துபோயிருந்தது. அவள் நிமிர்ந்து என் கண்களை தீர்க்கமாய் பார்க்க என் காதலை முழுமையாய்  உணரத்தொடங்கினேன்.

No comments:

Post a Comment