Tuesday, April 26, 2011

சாரல்

                                   " இன்னும் எவ்வளவு நேரம் மாடியிலேயே இருப்பாய் ? சீக்கிரம் கீழே வா... "  அம்மா ஐந்தாவது முறையாய் குரல் கொடுத்தாள். மாலை ஏழு மணி இருக்கும். பலவிதமான சிந்தனைகளில் சிக்கி தவித்து கொண்டிருந்தேன்.

                                    ஏதேதோ நினைவுகள் அலைகழிக்கும்  இறுக்கத்தில் இருந்து தப்பிக்க தான் மாடிக்கு வந்தேன். இமைகள் மூடிய சிறிது நேரத்திற்க்கெல்லாம் புதிதாய் ஒரு பெண் நினைவினில் நிழலாடினாள். மங்கலான கண்கள் அடர்ந்த கூந்தல் சுருள் சுருளாக நெளிந்து கொண்டிருந்தது. உதடுகளை அசைத்து ஏதோ பேசுகிறாளே. "... என்ன சொல்கிறாய் பெண்ணே ?...சற்று உரக்க பேசு...! ". மெதுவாய் உணர்ந்தேன் என்னை தான் அழைக்கிறாள் என்று. போகலாமா வேண்டாமா என்று யோசிக்கும் முன்னே கைகளைப்பற்றி இழுத்து சென்று விட்டாள். வெகுதூரம் அழைத்து சென்ற பின் என்னைப்பார்த்து முறுவலித்தாள். லேசாய் தூறல் ஆரம்பித்திருந்தது. சிறிது தூரத்தில் இருந்த வீட்டை நோக்கி இருவரும் ஓடினோம்.

                                 வீட்டின் வெளியே சலவைக்கல்லில் " பென்னிஸ் நெஸ்ட் " என்று பதிக்கப்பட்டிருந்தது. வீட்டில் நுழைந்ததும் என்னை இருக்கையில் அமரச்செய்து அப்பெண் உள்ளே சென்று விட்டாள். சுவரில் ஜீசஸ் கருணை பொங்க என்னைப் பார்த்தார். அவருக்கு கீழே ஏதேதோ வாசகங்கள்.
  

                                மரத்தால் ஆன வீடு போன்ற மாதிரி ஒன்று அருகில் இருந்த மேஜை மீது இருந்தது. அவள் அனுமதியின்றி அவ்வீட்டை தொட்டு பார்த்தேன். நான் நினைத்தது போல் அது மரத்தால் ஆனதன்று.  மெழுகால் நேர்த்தியாய் செய்யப்பட்டிருந்தது. அதன் ஜன்னலை மெதுவாய் திறந்து பார்த்த போது ஒரு குழந்தையும் நாயும் மெத்தையில் உறங்கிகொண்டிருந்தது தெரிந்தது. அந்த கைவினைப்பொருளில் இலயித்து போய் என்னையே மறந்து போனேன்.

                             " இந்தாருங்கள்... " என்று கோப்பையில் எதையோ நீட்டினாள். மறுப்பது அநாகரிகமாய் போகும் என்பதால் அவளையே பார்த்த வண்ணம் வாங்கி அருந்தினேன். அது மிகவும் சுவையான எலுமிச்சை சாறு. அவளின் பார்வையும் என்னை விட்டு அகலவில்லை. அவளிடம் பேசுவதற்காக நாக்கு துடித்த போதும் வார்த்தைகள் எங்கோ சென்று ஒளிந்து கொண்டன. 

                          "நான் யாரென்று அறிய வேண்டுமா?... உன்னையே கேட்டுப்பார்... எத்தனை முறை உன்னைச் சுற்றி சுற்றி வந்துள்ளேன்... உன் காலடியில் என் ஆசைகளையும் கற்பனைகளையும் சமர்ப்பணம் செய்த போதும் என்னைக் கண்டுக்கொள்ளாமல் ஏன் மறுதலித்தாய் ?... முடிவில்லாது போன என் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ளவே உன்னைக் கவர்ந்து வந்தேன்... காதல் சரித்திரங்களை படித்திருக்கிறாயா ?... காதலால் பிரிவை தாங்க முடியாது... நானும் நினைத்தேன் உன் நினைவிலேயே காலம் கடத்தலாம் என்று... எத்தனை நாள்தான் நிழலையே நிஜம் என்று கருதுவது ?... அந்த மெழுகு வீட்டை பார்த்தாயா ?... உள்ளே உறங்குவது என் குழந்தை தான்... அதனிடம் கேட்ட பின்பே உன்னைத் தேடினேன்... எண்ண அலைகளில் நீ குழம்பிக் கொண்டிருந்தாய்... புரியாது ஏதேதோ புலம்பிய உன் கதிர்கள் என்னைத் தாக்கியதும் உணர்ந்து கொண்டேன் நான் தேடிக்கொண்டிருந்த ஜீவன் நீதான் என்று...பென்னியின் பொக்கிஷம் நீ... இனி ஒருபோதும் உன்னை மீண்டும் தொலைந்து போக விட மாட்டேன்... " என்று சொல்லிக்கொண்டே அருகே வந்து முத்தமிட்டாள். அது இனிக்கவில்லை. 

                            அசந்து போய் அமர்ந்திருந்தேன். இவளை நான் இதற்கு முன்பு பார்த்திராத போதும் மிகவும் அன்னியோன்யமாய் பழகியவள் போல பேசுகிறாளே...! எப்பொழுது இவள் காதலை வெளிப்படுத்தினாள் ? அதை எப்பொழுது நான் மறுத்தேன் ? ஒருவேளை எப்பொழுதும் போல நான் கனவினில் கரைந்து கொண்டிருக்கிறேனா? இல்லை...! என் ஸ்பரிசத்தை என்னால் துல்லியமாக உணர முடிகிறதே...! எது எப்படி இருப்பினும் புதிதாய் வந்திருக்கும் வாசமான இந்த ஓவியத்தை நுகர முடிவு செய்தேன். 

                           நீராடியதும் வெப்பம் தணிந்து போனது. விதவிதமான ஆடைகளை அழகாய் அடுக்கி வைத்திருந்தாள். வெளிர்நீல நிறத்தில் உடுத்திக்கொண்டேன். அறையினில் மெல்லியதாய் பரவியிருந்த பூண்டின் வாசனையால் கொஞ்சம் அசௌகர்யமாய் உணர்ந்தேன். அலமாரியில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களை ஆராய்ந்து கொண்டிருந்த போது பென்னி மீண்டும் வந்தாள்.            "... அபூர்வமான புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளேன்... உனக்குத்தான் இதிலெல்லாம் ஆர்வம் அதிகமாயிற்றே...! " விநோதமாய் காணப்பட்ட ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினாள். அதில் உள்ள எழுத்துக்களையும் சித்திரங்களையும் பிறர் தீண்டினால் அவைகளின் பரிசுத்தம் பங்கம் அடைந்ததாய் கண்ணீர் சிந்துமாம். என்னைத்தவிர வேறு யாரையும் வாசிக்க அவைகள் அனுமதிப்பதில்லை என்று பென்னி சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. 

                         ஆசைத்தீர நீண்ட நேரம் பென்னி எனக்காக வாசித்தாள். அவளின் மங்கலான கண்கள் மேலும் மேலும் ஒளி இழந்து கொண்டே சென்றது. அவளின் கருவிழிகளில் துளையிட்டு என் கண்களின் ஒளியால் அதை நிரப்பினேன். பென்னியின் முகத்தை நிமிர்த்தி அவளின் கண்களில் என் கண்கள் பதிய பார்த்தபோது "... நான் உன்னை முழுமையாய் காதலிக்கிறேன்... " என்று கண்ணீர் மல்க தோள்களில் சாய்ந்தாள். என்னை அழகாய் நேசிக்க ஒரு பெண் இருக்கிறாளே...! பென்னியின் அரவணைப்பில் வேரோடு என்னை மறந்துக்கொண்டிருந்த போது அறையில் பரவியிருந்த பூண்டின் வாசனை அவளின் மீதும் லேசாய் கமழ்வதை உணர்ந்தேன்.

                        அங்கங்கே பச்சை முயல்கள் துள்ளிக்குதித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தன. ஆசையாய் ஒரு முயலைப்பிடித்து கைகளில் வைத்துக்கொண்டேன். உடனே பென்னி அதை விட்டுவிடுமாறும் இல்லையேல் அதன் பச்சை நிறம் உனக்கும் வந்துவிடும் என்று கூறியவுடன் திடுக்கிட்டு முயலை விட்டுவிட்டேன். எனது உள்ளங்கை இப்போது இளம்பச்சை நிறத்தில் மாறியிருந்தது. தண்ணீரைக் கேட்ட போது பென்னி பாதரசம் கொண்டு வந்து கைகளில் ஊற்றினாள். பழையபடி உள்ளங்கை சிவந்து போனது. அப்போதுதான் கவனித்தேன் பென்னியும் இளம்பச்சை நிறத்தில் இருந்தாள். பயம் மென்மையாய் பூக்க தொடங்கியது. சிக்கலான வலையை பென்னி நான் அறியாமல் என்னைச்சுற்றி பின்னிக் கொண்டிருக்கிறாளோ என்ற ஐயம் பிறந்தது. ஒருவேளை இதில் இருந்து எப்போதும் மீள முடியாமல் போனால்...!

                                 "வா..!...சற்று நேரம் வெளியே சென்று வரலாம்... "  என பென்னி அழைத்ததும் மறுக்க முடியாமல் அவளுடன் வெளியே சென்றேன் . வெளியே குளிர் கடுமையாய் இருந்தது. மிக மெல்லிய ஆடைகளை உடுத்தியிருக்கும் பென்னியால் குளிரை எவ்வாறு தாங்கிக்கொள்ள முடிகிறது? பனிமழை பொழிய தொடங்கியது. பனிமழை பொழிய தொடங்கியதும் பென்னியின் முகம் சிவந்து மலர்ந்தது. எங்களைப்போலவே பலபேர் உலவிக்கொண்டிருந்தனர். சில இணைகளில் ஆண்களும் சில இணைகளில் பெண்களும் பச்சை நிறத்தில் காணப்பட்டனர். மௌனமாகவே நடந்து வெகுதூரம் சென்றோம். இருந்தும் திரும்பினால் வீடு மிக அருகிலேயே இருப்பது வியப்பாக இருந்தது. அவளுடைய இருப்பு நான் அறிந்திராத உணர்வுகளை என்னுள் உருளச்செய்தது. இதுவரை எவருடன் பழகும்போதும் இவ்வளவு சுலபமாய் பாதுகாப்பாய் என்னை நான் உணர்ந்ததில்லை. எந்தக் கூண்டிலும் அடைபடாமல் சிட்டாய் சிறகுகளை விரித்து நான் பென்னியோடு பறந்து கொண்டிருந்தேன். இந்த நிலை அப்படியே நீடித்து நிற்க மனம் பிரயத்தனம் செய்தது. 
     
                                         மறுபடியும் வீட்டிற்கு திரும்பிய போது அறைகளில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் வரவேற்றன. வெண்மையான திரைச்சீலைகள் தூய்மையான முலாம் பூசியது. நான் அவளின் கரத்தை விடாது பிடித்தபடி முதலில் பார்த்த அறையினுள் பிரவேசித்தோம். மறுபடியும் மெழுகு வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்த போது அந்த பொம்மைக்குழந்தை புன்னகையுடன் உறங்கிக்கொண்டிருந்தது. படுக்கையில் சரிந்து விழுந்தேன். அருகில் அமர்ந்த பென்னி என் முகத்தை அவளின் மடியில் கிடத்திக்கொண்டு அந்த மெழுகுவீட்டை பார்த்துக்கொண்டிருந்தாள்.

                                           " தெரியுமா உனக்கு...? எத்தனை ஆண்டுகளாய் உன்னைத் தேடினேன்... எங்கோ புலப்படாமல் மறைந்துக் கொண்டிருந்தாயே... காத்திருந்து காத்திருந்து கடைசியாய் உன்னை கண்டுபிடித்து விட்டேன்... உனக்குத் தெரியாமல் உன்னை ரசிப்பதில் அலாதியான சுகம் கிடைக்கும்... அந்த சுகத்தில் மூழ்கி மூழ்கி திளைத்துள்ளேன்... அபரிதமான உன் அறிவிற்கு அப்பட்டமான அடிமையானேன்... உன் அறிவை புணர்ந்து நானும் அறிவாளியாய் மாற பலமுறை முயர்ச்சித்துள்ளேன்... சிறிதுகாலம் உன்னை உலகத்தார் அனுபவிக்கட்டுமே என்றே பொறுத்திருந்தேன்...என் பொறுமையே உனது குழப்பங்களின் வித்தாய் அமைந்தது... உனக்கும் தெரியாமல் என்னை நீ தேடிக்கொண்டிருந்தாய்... என் மடியில் படுத்து துயில உன் உள்மனம் ஏங்கிக் கொண்டிருந்தது... நீ அனுபவிக்கும் துயரை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை... நிம்மதியாய் உறங்கு...! எப்பொழுதும் தூறலாய் மகிழ்ச்சியின் சாரலாய் உனக்காக நான் இருக்கிறேன்..."  என்று முத்தமிட்டாள். அது இனித்தது இப்போது. 

2 comments:

  1. கதையின் தலைப்பை போலவே கதையின் முடிவும் இனித்தது அருமை . பகிர்ந்தமைக்கு நன்றி தொடரட்டும் உங்களின் எழுத்துப் பயணம் . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்கள் comment - க்கு நன்றி....உங்க வேண்டுகோள் என்னன்னு எனக்கு புரியல...சாரி... என்ன கேக்கறிங்கன்னு எனக்கு தெரியல...கொஞ்சம் புரியற மாதிரி விளக்கமா சொன்னிங்கன்னா கண்டிப்பாக செய்ய முயற்சி செய்வேன்...

    ReplyDelete